பேரழிவின் அபாயம்.. சராசரியை விட 1.5 மில்லியன் கி.மீ குறைந்த பனி - ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி!
அண்டார்டிகாவில் சராசரியை விட அதிகமான பனி குறைந்துள்ளதால் ஆராய்ச்சியாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
பனி குறைவு
அண்டார்டிகா பெருங்கடலை சுற்றியுள்ள கடற்பனி வரலாற்றில் இதுவரை காணப்படாத அளவிற்கு மிகவும் குறைந்துள்ளது. பூமியின் வட மற்றும் தென் துருவங்கள் தான் புவி அதிகம் வெப்பமடைவதில் இருந்து நம்மை காப்பாற்றுகிறது. ஆனால் அண்டார்டிகாவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், புவி வெப்பத்தின் தாக்கத்தில் எதிர்மறை விளைவுகளை உருவாக்கும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
இரு துருவங்களிலும் பனி மெலிவது புவியியல் ரீதியாக பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். உலக வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவதில் அண்டார்டிகாவின் பனிக்கட்டி பெரும் பங்கு வகிப்பதால் இது காலநிலை மாற்றத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
அபாயம்
இந்நிலையில், அண்டார்டிகா பெருங்கடலின் மேற்பரப்பில் மிதக்கும் பனியின் பரப்பளவு சுமார் 17 மில்லியன் சதுர கிலோ மீட்டருக்கும் குறைவாகவே உள்ளது, அதாவது செப்டம்பர் மாத சராசரியை விட 1.5 மில்லியன் சதுர கி.மீ கடல் பனி குறைந்துள்ளது. கடல் பனி குறைவதால், சூரிய ஒளியை பிரதிபலிக்காமல் இருண்ட கடல் பகுதிகள் வெளிப்படும்.
இது தண்ணீரால் வெப்ப ஆற்றலை உறிஞ்சுவதற்கு வழிவகுக்கிறது. இதனால் பனி உருகுவதும் மிகவும் வேகமாகும். தொடர்ந்து ஏற்படும் வெப்ப நிலை அதிகரிப்பால் இப்பகுதியின் வெப்ப நிலை விரைவில் 50 டிகிரியாக அதிகரிக்கக் கூடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.