பள்ளியில் நடந்த கண்மூடித்தனமான தாக்குதல் - 3 பேர் பலியான கொடூர சம்பவம்!
பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கா
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் 'அபண்டண்ட் லைஃப் கிறிஸ்தவப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் மழலையர் வகுப்பு முதல் மேல்நிலை வகுப்புகள் வரை உள்ளன.
இந்த நிலையில், 15 வயது மதிக்கத்தக்க மாணவி பள்ளியில் திடீரென நுழைந்து துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டுள்ளார். இதில் ஆசிரியர் ஒருவரும், சிறுவனின் சக மாணவர் ஒருவரும் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூடு
குறிப்பாகத் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மாணவியும் நிகழ்விடத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இதனால் விஸ்கான்சின் மாகாணத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் விசாரணை முடிவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் தெரிய வரும் எனக் காவல் துறைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரத்தால் இந்த ஆண்டு மட்டும் 322 பள்ளிக்கூட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.