ஆசை..ஆசையாக நூடுல்ஸ் ஆர்டர் போட்ட மாணவி - சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் நடந்த சோகம்!
பள்ளி மாணவி ஒருவர் ஆன்லைனில் நூடுல்ஸ் ஆர்டர் செய்து சமைத்து சாப்பிட்டதால் உயிரிழந்துள்ளார். .
நூடுல்ஸ்
திருச்சி மாவட்டம், அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜூடி மெயில்ஸ். ரயில்வே ஊழியரான இவர், தனது குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார். இவரது மகள் தான் ஸ்டெபி ஜாக்குலின் மெயில்ஸ்(15).
இவர் அங்குள்ள பிரபல தனியார்ப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். ஸ்டெபிக்கு நூடுல்ஸ் சாப்பிடுவது என்றால் மிகவும் பிடிக்கும். இதனால் சில நேரங்களில் கடைகளில் நூடுல்ஸ் வாங்கியும், அதை வீட்டில் சமைத்து சாப்பிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில், சனிக்கிழமை இரவு அவர் வழக்கம்போல் ஆன்லைனில் நூடுல்ஸ் பாக்கெட் ஆர்டர் போட்டுள்ளார். அது சில நிமிடங்களிலேயே வீட்டிற்கு வந்துள்ளது. அதைத் தொடர்ந்து அவர் நூடுல்ஸ் செய்து சாப்பிட்டு இரவு படுத்துவிட்டார்.
மாணவி
இருப்பினும், காலை அவர் நீண்ட நேரமாகியும் எழவில்லை. குடும்பத்தினர் அவரை எழுப்ப முயன்ற போது தான் அவர் உயிரிழந்துவிட்டது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதாவது ஸ்டெபி இறப்பில் சந்தேகம் உள்ளதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஸ்டெபி உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்க முயன்றனர்.
அப்போது ஸ்டெபியின் உறவினர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஸ்டெபியின் உடலைத் தர உறவினர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், புகார் வந்துள்ளதால் நிச்சயம் பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டும் என்று போலீசார் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.
ஸ்டெபி உடல் பிரேதப் பரிசோதனைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனை எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு உயிரிழப்பிற்கான காரணம் தெரிய வரும்.