பொய்யான பாலியல் புகார் அளித்த மாணவி - காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்
பள்ளி மாணவி பொய்யான பாலியல் புகார் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் குற்றங்கள்
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அடுத்தடுத்து வெளியாகி தமிழ்நாட்டை அதிர்ச்சியடைய வைத்தது.
இதனை கட்டுப்படுத்த அரசும் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. பாலியல் குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்கி தமிழக அரசு சட்ட திருத்தம் செய்தது.
போலி பாலியல் புகார்
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி, கடந்த சில நாட்களுக்கு முன்பு உதகை மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். இதில், பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பும் போது, இருவர் மயக்க மருந்து தடவிய கைக்குட்டையை முகத்தில் அழுத்தி, வனப்பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மதுபாட்டில்களால் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மருத்துவ பரிசோதனைக்காக மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்றும், மதுபாட்டிலால் தாக்கியதற்காக காயங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சி காரணம்
இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், மாணவி பள்ளிக்கு செல்லும் வழியில் இருக்கும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், மாணவி வழக்கம் போல் பள்ளிக்கு சென்று வருவது பதிவாகி இருந்தது. மேலும் சந்தேகப்படும்படியாக எதுவும் பதிவாகவில்லை.
இதனையடுத்து மாணவியிடம் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், மாணவி இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் மாணவியின் வீட்டுக்கு தெரியவர, அவரைக் கண்டித்துள்ளனர். இந்த விவகாரத்தை திசை திருப்பி இப்படி போலியான புகாரை அளித்துள்ளார்.
மேலும், படிப்பின் மீது நாட்டம் இல்லாததால், இதனை காரணம் காட்டி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்க இவ்வாறு திட்டமிட்டுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் சிறுமிக்கு அறிவுரை வழங்கி, அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.