பள்ளியில் வைத்தே மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - விஷயம் தெரிந்து ஆசிரியர்கள் செய்த கொடூரம்
8 ஆம் வகுப்பு மாணவி பள்ளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்.சி.சி முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தனியார் பள்ளி ஒன்று செயல் பட்டு வருகிறது. இந்த பள்ளியின் சார்பில் கடந்த 5 ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை என்.சி.சி முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளியைச் சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பள்ளி வளாகத்திலேயே தினமும் தங்கி என்.சி.சி முகாமில் பங்கேற்றனர்.
இந்த நிலையில், என்சிசி பயிற்சியாளரான சிவராமன்(30) என்பவர், கடந்த 8-ம் தேதி அதிகாலை 3 மணி அளவில் பள்ளி ஆடிட்டோரியத்தில் சக மாணவியருடன் தூங்கிக் கொண்டிருந்த 8 ஆம் வகுப்பு மாணவியை தனியே அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
பள்ளி முதல்வர் அலட்சியம்
தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பள்ளி முதல்வரிடம் மாணவி புகார் அளித்த போது, இதை வெளியில் சொல்ல வேண்டாம், பெற்றோருக்கு தெரிந்தால் கஷ்டப்படுவார்கள் என மாணவியை சமாதானபடுத்த முயன்றுள்ளார். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட மற்ற ஆசிரியர்கள், சிறுமிக்கு பப்பாளி பழம், அன்னாசி பழம் உள்ளிட்டவற்றை சாப்பிடச்சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 16ம் தேதி சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்படவே பெற்றோர் சிறுமியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சிறுமி தனக்கு பள்ளியில் நேர்ந்த கொடுமைகளை எடுத்துச் சொல்லியதை கேட்டு மருத்துவர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிறுமிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
கைது
இதனை தொடர்ந்து மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பயிற்சியாளர் என மொத்தம் 9 பெற போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். வழக்கில் முக்கிய குற்றவாளியான சிவராமன் என்பவர் கைது செய்யப்பட்ட போது தப்பியோட முயன்றதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
மேலும் சிவராமனிடம் போலீசார் நடத்தி விசாரணையில், அவர் போலி என்சிசி பயிற்சியாளர் என்பது தெரியவந்தது. என்சிசி பயிற்சியாளராக வேண்டும் என்றால் சேலத்தில் உள்ள மத்திய அரசு மையத்தில் அவர் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் அது போல் எந்த பதிவையும் செய்யவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் விசாரணையில், முகாமில் இருந்த 17 மாணவிகளில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.