4 ஆண்டுகளில் இது 3வது முறை - பள்ளி, கல்லூரி அனைத்திற்கும் விடுமுறை!
பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கி 17ம் தேதி முடிவடைந்தது. இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக, பாஜக, த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.
திமுக சார்பில், வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி என்பவர் போட்டியிடுகிறார். இந்நிலையில், தேர்தலில் அனைவரும் வாக்களிக்கும் விதமாக இன்று (பிப்ரவரி 5ம் தேதி) ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை
மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தனியார் நிறுவனங்கள் பொருந்தும் என்றும் ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
இதன்படி கடந்த 4 ஆண்டுகளில் 3-வது முறையாக எம்.எல்.ஏ.வை வாக்காளர்கள் தேர்வு செய்ய உள்ளனர். தற்போது கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 128 ஆண் வாக்காளர்கள்,
1 லட்சத்து 17 ஆயிரத்து 381 பெண் வாக்காளர்கள், 37 3-ம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்யவுள்ளனர்.