இனி இந்தியாவில் டோல்கேட் இருக்காது - அமைச்சர் சொன்ன தகவல்
நாடு முழுவதும் ஒரே மாதிரியான சுங்க கொள்கையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
நிதின் கட்காரி
மத்திய நெடுஞ்சாலைத்துறை மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி(nitin gadkari) தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.
இதில் தரமற்ற சாலைகள் தொடர்பாக வாகன ஓட்டிகளின் புகார் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தேசிய நெடுஞ்சாலைகளில் ஒரே மாதிரியான சுங்க கொள்கையை(uniform toll policy) அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் வாகன ஓட்டிகளின் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும்.
சுங்கச்சாவடி
செயற்கைகோள் கண்காணிப்புடன் பயண தூரத்துக்கு ஏற்ப சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளோம். இதனால் இனி சுங்கச்சாவடிகளுக்கு வேலை இருக்காது. சமூக ஊடகங்களில் வாகன ஓட்டிகள் அளிக்கும் புகார்களை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதோடு, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.
தற்போது, தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தில் தனியார் கார்கள் சுமார் 60 சதவீதமாக இருந்தாலும், இந்த வாகனங்களிலிருந்து வரும் சுங்க வருவாயில் 20-26 சதவீதம் மட்டுமே உள்ளது.
ஒரு நாளைக்கு 37 கி.மீ
நடப்பு நிதியாண்டில் இதுவரை சுமார் 7,000 கி.மீ. நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டுள்ளன. 2020-21 நிதியாண்டில் ஒரு நாளைக்கு 37 கி.மீ தூரத்துக்கு சாலை அமைத்து நெடுஞ்சாலைத் துறை சாதனை படைத்தது. நடப்பு நிதியாண்டில் இந்த சாதனை முறியடிக்கப்படும்.
2019-20 ஆம் ஆண்டில் ரூ.27,503 கோடியாக இருந்த சுங்க வசூல், 2023-24 ஆம் ஆண்டில் ரூ.64,809.86 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 35 சதவீதம் அதிகமாகும்" என கூறினார்.