பாபா ராம்தேவ்;மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதி தராதீர்கள்- நீதிமன்றம் கட்டம்!
பதஞ்சலி நிறுவன விளம்பரங்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதஞ்சலி
பாபா ராம்தேவின் சொந்த நிறுவனம் பதஞ்சலி. இந்த நிறுவனம் அலோபதி மருத்துவ முறைக்கு எதிரான கருத்துக்களை உள்ளடக்கியும் விளம்பரங்கள் வெளியாகின இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தது.
இந்த வழக்கு விசாரணையில், எந்தவொரு தவறான விளம்பரங்களையும் செய்ய வேண்டாம். மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து, பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகினர். அப்போது, பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் சார்பாக மன்னிப்புக் கோரப்பட்டது.
நீதிமன்றம் கட்டம்
அதில், ‘பதஞ்சலியின் நோக்கம் இந்த நாட்டின் குடிமக்களை எங்கள் தயாரிப்புகளை பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ அறிவுறுத்துவது மட்டுமே. ஆயுர்வேதம் மூலம் வாழ்க்கை முறை தொடர்பான மருத்துவ சிக்கலுக்கு தீர்வுகளை வழங்குவதன் மூலம், நாட்டின் சுகாதார உட்கட்டமைப்பின் சுமையை குறைப்பதே பதஞ்சலியின் நோக்கம்' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதில் அளித்த நீதிமன்றம், உங்களின் மன்னிப்பு எங்களுக்கு திருப்திகரமானதாக இல்லை. மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதிக் கொடுத்துவிட்டு தப்பித்து விடலாம் என நினைக்காதீர்கள். நீங்கள் செய்திருப்பது மிகப்பெரிய நீதிமன்ற அவமதிப்பு என்றார்.
மேலும், தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நடவடிக்கைக்கு தயாராக இருங்கள் எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரம் மீது ஆயுஷ் துறை இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கில் ஒரு வாரத்தில் ஆயுஷ் சார்பில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும் எனவும் இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்று மீண்டும் பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் அவர்கள் உத்தரவிட்டனர்.