சீமான் விஜயலட்சுமிக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை? - உச்சநீதிமன்றம் அறிவுரை
சீமான் விஜயலட்சுமிக்கு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீமான் விஜயலட்சுமி வழக்கு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, 2011 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், 2012 ஆம் ஆண்டு இந்த புகாரை திரும்ப பெறுவதாக விஜயலட்சுமி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இடைக்கால தடை
இந்நிலையில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென சீமான் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, " சர்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது" என்று கூறி சீமானின் மனுவை தள்ளுபடி செய்ததோடு, வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை 12 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து, காவல்துறை சம்மன் அனுப்பிய நிலையில், வளசரவாக்கம் காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி சீமான் விளக்கமளித்தார். மேலும், இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று(03.03.2025) விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ள நிலையில், "இந்த புகாரை 3 முறை நடிகை வாபஸ் பெற்றுள்ளார். புதிய அரசு பொறுப்பேற்றதும் அரசியல் காரணங்களுக்காக விசாரிக்கப்படுகிறது" என சீமான் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இரு தரப்பும் இதில் உடன்பாடு காண வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.