விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடக்கிறதா? - தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு பதில்
விருதுநகர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரமேலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிட்டிங் எம்.பி மாணிக்கம் தாகூர், தே.மு.தி.க சார்பில் விஜய பிரபாகரன், பா.ஜ.க சார்பில் ராதிகா சரத்குமார் ஆகியோர் போட்டியிட்டனர். ஸ்டார் வேட்பாளர்கள் போட்டியிட்டதால் விருதுநகர் தமிழகத்தின் முக்கிய தொகுதியாக கவனம் பெற்றது.
தே.மு.தி.க வேட்பாளர் விஜய பிரபாகரன், காங்கிரஸ் வேப்டாளர் மாணிக்கம் தாகூர் இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவியது. ஆரம்பத்தில் இருந்தே முன்னிலை வகித்த விஜய பிரபாகரன், இறுதியில் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் மாணிக்கம் தாகூரிடம் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டது.
பிரமேலதா விஜயகாந்த்
இது தொடர்பாக இன்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “விருதுநகரில் விஜய பிரபாகரன் தோற்கவில்லை. தோற்கடிக்கப்பட்டுள்ளார். வீழ்ச்சியடையவில்லை, வீழ்த்தப்பட்டிருக்கிறார். இதுதான் உண்மை. கேப்டன் நினைவிலிருந்து மீளவில்லை என்பதால், விஜய பிரபாகரன் தேர்தலில் போட்டியிட மறுத்தார். நிர்வாகிகளின் அன்புக்கட்டளையை ஏற்றே விருதுநகரில் போட்டியிட்டார்.
வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. அதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம். விரைவில் தேர்தல் ஆணையம் ஒரு நல்ல முடிவை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
நீதிமன்றத்துக்கு சென்றால் வழக்கை கிடப்பில் போட்டு விடுவார்கள் என்பதால் வழக்கு தொடரவில்லை. நீதிமன்றத்தில் உடனடியாக தீர்வு கிடைக்கும் என்றால் நாங்கள் உடனடியாக வழக்குத் தொடுக்க தயார்" என்று அவர் தெரிவித்தார்.
சத்யபிரதா சாகு
இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, “விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்துவது தொடர்பாக இதுவரை தேர்தல் ஆணையத்திற்கு புகார் எதுவும் வரவில்லை. மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பாக உயர் நீதிமன்றத்தை நாடுவதே முறை.
உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரிலேயே மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் நடைபெற்று 45 நாட்களுக்கு பதிவான வாக்குகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.