யாராலும் மறுக்க முடியாது; நான் இருக்கேன்.. அதிமுக இணையும் - அடித்து சொன்ன சசிகலா
சட்டமன்ற தேர்தலுக்கு முன் அதிமுக ஒன்றிணையும் என சசிகலா தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒன்றிணையும்
திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் வி.கே.சசிகலா சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து தரிசனத்திற்கு பின், கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த ஆன்மீக பக்தர்களிடம் நின்று செல்பி மற்றும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, “வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக அதிமுக ஆட்சி அமைக்கும். தற்போது திமுக அரசாங்கம் சரிவர செயல்படவில்லை என்று ஒட்டுமொத்த மக்களும் அறிந்த ஒன்று. இதனை யாராலும் மறுக்க முடியாது.
சசிகலா சூளுரை
மீதம் உள்ள ஆட்சி காலத்தை நடத்துவதற்காக திமுக தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை கூட்டணி கட்சிக்காரர்களை வைத்துக்கொண்டு அனைத்துப் கட்சிக் கூட்டத்தை நடத்தி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இதனை பிரச்சார யுக்தியாக செய்து வருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்து 43 மாதங்களுக்கு பின்னர் தற்போது தான் 2500 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மருத்துவர்களை மட்டும் நியமித்தால் போதாது அங்கு செவிலியர்களையும் நியமிக்க வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை எதிர்ப்பதையே நோக்கமாக கொண்டுள்ளதால் தமிழக மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அ.தி.மு.க. ஒன்றிணையும், கட்சியை ஒருங்கிணைக்க நான் இருக்கிறேன். அதிமுக பாஜகவிற்கு எதிரி இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.