ஒன்னாதான் இருக்கோம்.. இது என் சபதம் - அண்ணா பிறந்தநாள் விழாவில் சசிகலா!
அனைவரையும் ஒன்றிணைத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல வெற்றியைப் பெறுவோம் என சசிகலா தெரிவித்துள்ளார்.
சசிகலா
தஞ்சை பரிசுத்த நகரில் உள்ள சசிகலாவின் வீட்டு வளாகத்திற்குள் வைக்கப்பட்டு இருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர்,
"பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி அதிமுகவில் பிளவுப் பட்டு உள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இந்த நாளில் நான் இதை சபதமாக ஏற்கிறேன். அதிமுகவில் அனைவரும் நிச்சயமாக ஒன்றாக இணைவோம்.
தொண்டர்கள் விருப்பம்
அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஓபிஎஸ் சரியாக தான் சொல்லி இருக்கிறார். நாங்கள் அனைவரும் ஒன்றாக தான் இருக்கிறோம். இதுதான் தொண்டர்களின் விருப்பம். பண்ருட்டி ராமச்சந்திரன், எங்கள் கட்சியின் மூத்த தலைவர் என்பதால் அவரை ஓபிஎஸ் பார்த்திருக்கலாம்.
தொண்டர்கள் நினைத்தால் கட்சித் தலைமையை நான் ஏற்க தயாராகவுள்ளேன். நேரம் வரும்போது கட்சி அலுவலகத்துக்குச் செல்வேன். ஓபிஎஸ்-ஸும் நாங்களும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். திமுக அரசு சொன்னதை எதுவும் செய்யவில்லை! என நான் போகும் இடங்களில் மக்கள் தெரிவிக்கின்றனர்.
என் சபதம்
ஏழை எளிய மக்களுக்காக அம்மா கொண்டுவந்த பல நல்ல திட்டங்களை தி.மு.க அரசு நிறுத்துவது நல்லதல்ல. அரசாங்கத்தில் நிறைய தவறுகள் நடக்கின்றன. அவற்றை அரசு சரிசெய்ய வேண்டும். முன்னாள் அதிமுக அமைச்சர்கள்மீது நடத்தப்படும் சோதனை குறித்து வெளியே தெரிந்த பிறகே பேச வேண்டும்.
நாமாக எதையும் சொல்லக்கூடாது. அதிமுக-வுக்கு நிச்சயமாக தலைமை ஏற்பேன், அனைவரையும் ஒன்றிணைப்பேன். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல வெற்றியைப் பெறுவோம்" எனத் தெரிவித்தார்.