வாய பொத்திட்டு இருக்கணுமா? டென்ஷனான சசிகலா - என்ன நடந்தது?
எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்வியால் சசிகலா கொதித்தெழுந்து விட்டார்.
சசிகலா
சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். அந்த நேரத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் சசிகலாவை அதிமுகவில் சேர்க்கவில்லை.
அதன்பின் ஒன்றாக இருந்த ஓ.பன்னீர் செல்வமும் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். தற்போது, முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் அதிமுக உள்ளது. தொடர்ந்து நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை.
இதற்கிடையில், விக்கிரவாண்டி சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அதிமுக அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் சசிகலா பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அதிமுகவில் ரீஎன்ட்ரி
அப்போது பேசிய அவர், ‛‛மக்கள் பிரச்சனைகளுக்கு இந்த அரசு சரிவர தீர்வு காணவில்லை. கொடநாடு வழக்கை வைத்து கொண்டு திமுக நாடகமாடி வருகிறது. திமுக அரசின் விசாரணை ஆமை வேகத்தில் செல்கிறது. அந்த வழக்கை இன்னும் திமுக முடிக்கவில்லை.
அதன் பின்னணி பற்றி பத்திரிகையாளர்கள் தான் கேட்க வேண்டும். மேலும் தேர்தலுக்கு தேர்தல் கொடநாடு வழக்கு என்று வருகிறது. அதனை பொறுப்புள்ள முதலமைச்சர் தான் சொல்கிறார். இந்த வழக்கை அவர் விரைவாக நடத்த வேண்டும். ஆனால் அவர் அதனை செய்யவில்லை” என்றார்.
மேலும், கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் எல்லாம் அதிமுக பற்றி பேசக்கூடாது என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாரே? என்ற கேள்விக்கு அவரு பேசினா நான் சும்மா வாயை பொத்திக்கொண்டு உட்கார்ந்து இருக்க வேண்டுமோ என ஆவேசமாக பதிலளித்தார்.
மீண்டும் தான் அதிமுகவில் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளதாகவும், அதிமுக அழிந்துவிட்டதாக யாரும் நினைக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.