திமுகவில் ராஜ்ய சபா எம்.பி - தற்போது பாஜகவில்..! சரத்குமாரின் அரசியல்
திரை ஆளுமைகள் அரசியல் ஆளுமைகளாக மாறும் முயற்சிப்பது தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்று வருகின்றது.
சரத்குமார்
வில்லன் நடிகராக தனது திரை வாழ்க்கையை துவங்கிய சரத்குமார் மேல நாயகனாக அறிமுகமாகி பின்னர் தொடர் வெற்றி படங்களில் நடித்தார். படத்தில் வெற்றி பெறுபவர்களிடம் அரசியல் கேள்விகள் கேட்பதும், அவர்களின் அரசியல் வருகைகளை பற்றி பேசுவதையும் போல, சரத்குமாரிடமும் கவனம் அவ்வப்போது விழத்துவங்கின.
1996ஆம் ஆண்டு திமுக - தமாக கூட்டணிக்கு தனது ஆதரவை அளித்த சரத்குமார், அப்போது முதல் அரசியல் களத்திலும் விவாதிக்கப்படும் நபராக மாறினார். ஆதரவு அளித்தது மட்டுமின்று தன்னை திமுகவில் இணைத்து கொண்டார் சரத்குமார்.
ராஜ்ய சபா
அதற்கு பலனாக, 1998ஆம் ஆண்டின் மக்களவை தேர்தலில் திருநெல்வேலியில் திமுக வேட்பாளராக களம் கண்ட சரத்குமார், அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.கடம்பூர் ஜனார்தனனிடம் வெறும் 6,904 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இருப்பினும் சரத்குமாருக்கு 2001ஆம் ஆண்டு ஜூலையில் ராஜ்ய சபா உறுப்பினர் பதவி அளித்தது திமுக. பின்னர் திமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவி ராதிகாவுடன் அதிமுகவில் இணைந்தார். ராஜ்ய சபா பதவியை மே 2006-இல் ராஜினாமா செய்தார்.
சமத்துவ மக்கள் கட்சி - அதிமுக
அதே ஆண்டு, ராதிகா கட்சிக்கு எதிராக செயல்பட்டதன் காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட போது, அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார், 31 ஆகஸ்ட் 2007 ஆம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நிறுவினார்.
வழக்கம் போல திராவிட கட்சிகள் ஒன்றுமே செய்யவில்லை என்ற குற்றசாட்டை வைத்த சரத்குமார், 2011-ஆம் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 2 இடங்களில் போட்டியிட்டார். தென்காசியில் சரத்குமாரும், நான்குனேரியில் எர்ணாவூர் நாராயணனும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
பாஜகவில் ஐக்கியம்
அத்துடன் அவரது அரசியல் செல்வாக்கு பெரும் பின்னடைவை சந்தித்தது. மீண்டும் 2016-ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட சரத்குமார் தோல்வியடைந்தார். அதனை தொடர்ந்து 2021-ஆம் தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியுடன் தேர்தலை சந்தித்து போட்டியிட்ட 33 தொகுதிகளிலும் தோல்வியடைந்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், தான் முதலமைச்சராக வேண்டும் என மாமியார் விரும்புவதாக தெரிவித்த நிலையில், தற்போது கட்சியை பாஜகவில் இணைத்துள்ளார்.