பரபரக்கும் தமிழக அரசியல் களம் - பாஜகவில் கட்சியை இணைத்த சரத்குமார்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்தார் கட்சியின் தலைவர் சரத்குமார்.
கூட்டணி
வரும் மக்களவை தேர்தலை முன்னிட்டு, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் சில தினங்கள் முன்பு இணைத்தது சமத்துவ மக்கள் கட்சி.
நேற்று சென்னை கமலாலயத்தில், தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து பேசிய பின், தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து சில நாட்களுக்கு பிறகு அறிவிக்கப்படும் என்று சரத்குமார் தெரிவித்திருந்தார்.
பாஜகவில்...
இந்நிலையில், இன்று தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்தார் சரத்குமார். ஒரு முறை எம்.எல்.ஏ, ஒரு முறை ராஜ்ய சபா உறுப்பினராகவும் இருந்த சரத்குமார் தற்போது கட்சியை இணைத்துள்ளது தலைப்பு செய்தியாக மாறியுள்ளது.
இது குறித்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சரத்குமாரை மாநிலத்திற்குள் அடைத்து விடாமல், அவர் தேசத்திற்கு தேவைப்படுகிறார் என்று குறிப்பிட்டார். அதே போல சரத்குமார் பேசுகையில், கட்சியை பாஜகவில் இணைத்துள்ளது முடிவல்ல என்றும் இது மக்கள் சேவைக்கான துவக்கம் என்றும் குறிப்பிட்டார்.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பல கட்சிகள் பாஜகவின் கூட்டணியில் சேர்வதும், தற்போது சரத்குமார் கட்சியை இணைத்துள்ளதும் பாஜகவின் வாக்கு வங்கி வலு பெறுமா.? என்ற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது.