போஸ்டரில் அமித் ஷா படத்திற்கு பதில் சந்தான பாரதி- கலாய்த்து தள்ளிய கார்த்தி சிதம்பரம்!
அமித் ஷாவின் தமிழக வருகையையொட்டி அடிக்கப்பட்ட போஸ்டரில் அவரது படத்திற்கு பதிலாக சந்தான பாரதி படம் இடம்பெற்றுள்ளது.
மத்திய அமைச்சர் பிரச்சாரம்
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிக்க தீவிர தேர்தல் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய தமிழகத்துக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சில காரணங்களால் அது ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று மீண்டும் அமித் ஷா வாக்கு சேகரிப்பதற்காக தமிழகம் வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பாஜகவினர் வரவேற்பு போஸ்டர்கள் ஓட்டியுள்ளனர். அடித்த போஸ்டரில் மீண்டும் அமித் ஷாவுக்கு பதிலாக சந்தான பாரதி படத்தை பயன்படுத்தியுள்ளனர்.
அமித் ஷா பதில் சந்தான பாரதி
இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகியுள்ளது. இதனை தனது எக்ஸ் தளத்தில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் பகிர்ந்து,அதில் கிண்டலடிக்கும் விதமாக ‘சந்தான பாரதி ஃபேன் கிளப்’என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம், கதை உள்ளிட்ட பன்முக திறமைகொண்டுவர் சந்தான பாரதி. இவர் குணா, மகாநதி என 10 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். தொடர்ந்து இவருக்கும், மத்திய அமைச்சருமான அமித் ஷாவுக்கும் சில உருவ ஒற்றுமை இருப்பதால் பல நேரங்களில் பாஜக கட்சியினர் அடிக்கும் போஸ்டர்களில் அமித் ஷா படத்திற்கு பதிலாக சந்தான பாரதி படத்தை பயன்படுத்தும் நிகழ்வு நடந்து வருகிறது.