கவுதம் கம்பீரிடம் ஒழுக்கம் இல்லை..கிரிக்கெட் வர்ணனையாளர் கடும் விமர்சனம்!
செய்தியாளர்களிடம் பேசும் ஒழுக்கம் கவுதம் கம்பீரிடம் இல்லை என கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சுரேக்கர் தெரிவித்துள்ளார்.
கவுதம் கம்பீர்
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது விராட் கோலி கடந்த 5 வருடத்தில் 2 சதங்கள் மட்டுமே அடித்துள்ளார் என்பது சரியல்ல. இது ஒரு கவலையளிக்கும் விஷயம்’ என்று ரிக்கி பாண்டிங் விமர்சனம் செய்திருந்தார்.
விராட் கோலி, ரோஹித் சர்மா பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இந்திய கிரிக்கெட் பற்றி பாண்டிங்கிற்கு என்ன வந்தது? அவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியைப் பற்றி மட்டும்தான் யோசிக்க வேண்டும் எனக் கம்பீர் அதிரடியாகப் பதில் அளித்தார்.
அவரது இந்த பதில் முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் இடையே பல கேள்விகளை எழுப்பியது. இந்த நிலையில் கம்பீரின் இந்த பேச்சுக்கு இந்திய முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சுரேக்கர் தன் எக்ஸ் தளப் பதிவில் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
ஒழுக்கம் இல்லை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவு, “கம்பீர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதைக் கேட்டேன். கேட்ட பிறகு முதல் மனப்பதிவு என்னவெனில், தயவு கூர்ந்து கம்பீரை செய்தியாளர்களிடம் அண்ட விடாதீர்கள். அவர் திரைக்குப் பின்னால் இருக்கட்டும்.
செய்தியாளர்களிடம் உரையாடும் திறனோ, அதற்குரிய சரியான வார்த்தையோ, சரியான நடத்தையோ அவரிடம் இல்லை. ரோஹித் சர்மா அல்லது அகார்கர் இதற்கு சிறந்த நபர்கள் என்று நினைக்கிறேன். கம்பீரிடம் செய்தியாளர்களிடம் பேசும் ஒழுக்கம் இல்லை” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.