தூய்மைப் பணியாளர்களை அரசு பேருந்தில் ஏற்ற மறுத்த அவலம்..இருவர் சஸ்பெண்ட்!
தூய்மைப் பணியாளர்களை பேருந்தில் ஏற்ற மறுத்தது தொடர்பாக இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அரசு பேருந்தில்..
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் காலையில் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். அங்கிருந்து மருத்துவமனைக்கு செல்ல அரசுப் பேருந்தில் ஏறினர்.
ஆனால், பேருந்தை எடுக்க தாமதப்படுத்தியதோடு அனைவரையும் இறங்கி செல்லுமாறு பேருந்து நடத்துநர் யேசுதாஸ் என்பவர் கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இருவர் சஸ்பெண்ட்
பேருந்தில் அவர்களை ஏற்ற மறுத்ததால் உரிய நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாக குற்றம்சாட்டினர். இந்த தகவலறிந்து வந்த போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி ஆம்புலன்ஸ் மூலம் பணிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக போக்குவரத்து துறை அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.மேலும், நேரக் காப்பாளர் ராஜா மற்றும் பேருந்து நடத்துநர் யேசுதாஸ் ஆகிய இருவரை பணியிடை மாற்றம் செய்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.