சண்டாளர் என்ற வார்த்தை பயன்படுத்தக்கூடாது - அரசுக்கு ஆணையம் பரிந்துரை
பட்டியலினத்தோர் மாநில ஆணையம் சண்டாளர் என்ற சாதிப்பெயர் வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது.
கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் சண்டாளர் என்ற வார்த்தை கடும் சர்ச்சைகளை உண்டாக்கி வருகிறது. இதிலும் நாம் தமிழர் சீமானே தலையிட்டார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி அதிகமாக இவ்வார்த்தையை பயன்படுத்தினார் என நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய நிலையில், அது சர்ச்சையாக வெடித்துள்ளது.
இந்த சூழலில் தான், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பரிந்துரை ஒன்றை தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கை வருமாறு,
"சண்டாளர்" என்கிற சாதிப் பெயரை பயன்படுத்தக் கூடாது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அறிவுறுத்தல்.
இந்தியாவின் சாதியக் கட்டமைப்பில் ஒவ்வொரு சாதிக்கும் வெவ்வேறு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இப்பெயர்கள் சமூக மதிப்பையும் அவமதிப்பையும் சுட்டுவதாக இருக்கின்றன. தங்களுடைய சாதியின் பெயர் இழிவாக இருப்பதாகக் கருதுகின்ற சாதிகள் அப்பெயரை மாற்றிக் கொள்வதும், அதற்கு அரசு ஒப்புதல் கொடுத்து அரசாணை வெளியிடுவதும் தொடர்ந்து நிகழ்கின்றன.
மனிதர்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான அடிப்படையான பொருட்களை உற்பத்தி செய்தல், பிணங்களை அடக்கம் செய்தல் போன்ற சமூகப் பயனுள்ள பணிகளைச் செய்கின்ற சமூகக் குழுக்களை இழிவான பெயர்களில் அழைப்பதும், அரசியல் மேடைகளில் பிறரை வசைபாடுவதற்குப் பயன்படுத்துவதும், கலை இலக்கியங்களிலும், திரைப்பட நகைச் சுவைக் காட்சிகளிலும், திரைப்படப் பாடல்களிலும் அப்பெயர்களைப் பயன்படுத்துவதும் பரவலாக இருக்கின்றன.
இது, அப்பெயர்களிலுள்ள மக்களையும் அவர்களைப் போன்ற மக்களையும் புண்படுத்தும் செயலாகும். தவிர இது, சட்டப்படி தண்டனைக்குரிய குற்றச்செயல் என்ற எண்ணமும் பொதுச் சமூகத்தில் இல்லை.
பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 - இன்படி, பொதுவெளியில் பட்டியல் சாதிப் பெயர்களை இழிவான பொருளில் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். தமிழ்நாட்டில் சில பகுதிகளிலும் இந்தியாவிலும் 'சண்டாளர்' என்ற பெயரில் மக்கள் இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் பட்டியல் சாதியினர் அட்டவணையில் இப்பெயர் 48 - ஆம் இடத்தில் உள்ளது என்பதையும் இவ்வாணையம் சுட்டிக்காட்டுகிறது. அண்மைக் காலங்களில் பிறரை இழிவுபடுத்தும் நோக்கில் இப்பெயர் பொதுவெளியில் சமூக ஊடகங்களில் அழுத்தமாகப் பேசப்படுவதைக் காணமுடிகிறது.
எனவே, இழிவுபடுத்தும் நோக்கத்திலோ, நகைச்சுவையாகவோ, அரசியல் மேடைகளிலோ 'சண்டாளர்' என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அறிவுறுத்துகிறது. மேலும், அவ்வாறு பயன்படுத்துவோர் மீது பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் - 1989 - இன் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அரசுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பரிந்துரைக்கிறது.