சாம்சங் ஊழியர்கள் தொடர் போராட்டம்..கெடு விதித்த நிறுவனம் - பணிநீக்கம் செய்ய திட்டம்!
ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படும் என சாம்சங் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
சாம்சங் ஊழியர்கள்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இயங்கும் சாம்சங் தொழிற்சாலையில் 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள், ஊதிய உயர்வு, போனஸ், 8 மணி நேர வேலை,
தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9ம் தேதி தொடங்கி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சாம்சங் நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊழியர்களின் வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது. போராட்டத்தால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும்.
பணிநீக்கம்
பணிக்கு திரும்ப விரும்பும் ஊழியர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது. ஏற்கனவே ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. இன்னும் 4 நாட்களுக்குள் (செப்.24) ஊழியர்களுக்கு பணிக்கு திரும்பவில்லை என்றால் பணிநீக்கம் செய்ய நேரிடும்" என்று சாம்சங் தெரிவித்துள்ளது.
சி.ஐ.டி.யு போன்ற தொழிற்சங்கங்களை அங்கீகரிப்பது போன்ற கோரிக்கைகளை சாம்சங் நிர்வாகம் ஏற்காத நிலையில், இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.