எச்சரிக்கை பட்டியலில் சமோசா, ஜிலேபி - அரசு அதிரடி முடிவு
சமோசா, ஜிலேபிக்கு எச்சரிக்கை வாசகங்களை வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சமோசா, ஜிலேபி
'லான்செட்' மருத்துவ இதழ் வெளியிட்ட ஆய்வில், '2050ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள 44 கோடி பேர் உடல் பருமன், நீரிழிவு, ரத்த கொதிப்பு போன்ற வாழ்வியல் மாற்ற நோய்களுக்கு உள்ளாகக்கூடும்' என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை, அதிக இனிப்பு, கொழுப்பு மற்றும் மாவுச்சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்கும்படி அறிவுறுத்தியுள்ளது.
அரசு திட்டம்
மேலும், நாக்பூர் எய்ம்ஸ் உட்பட அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளிலும், உணவுப்பொருட்களில் இருக்கும் எண்ணெய் மற்றும் சர்க்கரை அளவுகளை பட்டியலிட்டு பலகைகள் வைக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த அறிவிப்புப் பலகையில் நாம் தினமும் உண்ணும் அன்றாட சிற்றுண்டி உணவுகளில் எவ்வளவு கொழுப்பு மற்றும் சர்க்கரை இருக்கிறது என்பதை விளக்கும் பட்டியல் இடம்பெறவுள்ளது. இந்த வரிசையில் சமோசா, ஜிலேபி போன்ற உணவு வகைகள் உடலுக்கு தீங்கானது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சிகரெட் பாக்கெட்களில் எச்சரிக்கை வாசகம் இருப்பது போல சமோசா, ஜிலேபி அடைத்து விற்கப்படும் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை வாசகம் விரைவில் இடம்பெறும் என்று இதயவியல் சங்கத்தின் நாக்பூர் பகுதி தலைவர் அமர் ஆம்லே தெரிவித்துள்ளார்.