சேலத்தில் பிளஸ் 2 மாணவி தற்கொலை முயற்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
கள்ளக்குறிச்சி கலவரம்
இதில் பள்ளி முழுமையாக சூறையாடப்பட்ட நிலையில், பள்ளி வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
இந்த போராட்டத்தின் போது, கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது இதில் 55 போலீசார் காயமடைந்தனர். அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நீடித்து வருவதால் வஜ்ரா வாகனங்களுடன் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிளஸ்2 மாணவி தற்கொலை முயற்ச்சி
இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சேலம் மேச்சேரியில் கோகிலவாணி என்ற 12 ஆம் வகுப்பு மாணவி அரசு பள்ளியின் 2வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அதில் படுகாயமடைந்த மாணவி மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மாணவியின் தற்கொலை முயற்சிக்கும் பள்ளிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் குடும்ப பிரச்னை காரணமாக மாணவி தற்கொலைக்கு முயன்றதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
வருங்காலத்தில் கல்வி நிறுவனங்களில் மரணங்கள் நிகழும் போதெல்லாம், சிபி-சிஐடி மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும்,என்று சற்று நேரத்திற்கு முன்பாக தான், உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், அரசுப்பள்ளியில் மாணவி ஒருவர் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.