கள்ளக்குறிச்சி கலவரம் :டிசிஐ எரிக்க யார் உரிமை கொடுத்தது ? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
கள்ளக்குறிச்சி கலவரம்
இதில் பள்ளி முழுமையாக சூறையாடப்பட்ட நிலையில், பள்ளி வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இந்த போராட்டத்தின் போது, கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது இதில் 55 போலீசார் காயமடைந்தனர்.
அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நீடித்து வருவதால் வஜ்ரா வாகனங்களுடன் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது அப்போது பேசிய நீதிபதி, கள்ளக்குறிச்சி சம்பவம் திட்டமிட்ட வன்முறை என்றும், இதன் பின்னணியில் இருப்பது யார் என்றும் சரமாரியாக கேள்வியெழுப்பினார்.
உயர் நீதிமன்ற நீதிபதி எழுப்பிய கேள்விகள் :
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்?
போராட்டம் நடத்த அனுமதித்தது யார்?
மாணவியின் இறப்புக்கு என்ன காரணம்?
வன்முறையின் பின்னணி என்ன?
இந்த போராட்டத்தை தூண்டிவிட்டது யார்?
வனமுறை தொடர்பாக உளவுத்துறையின் நடவடிக்கை என்ன?
மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ்களை எரிக்க யார் உரிமை கொடுத்தது ?
மேலும் வழக்கை தொடர்ந்து நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.