ஆசிரியர் பணியிடை நீக்கம்; போராட்டத்தில் குதித்த மாணவர்கள் - என்ன காரணம்?
ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பணியிடை நீக்கம்
சேலம் மாவட்டம் கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு ஊயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் முரளிதரன். இவர் பள்ளிக்கு வரும்போது வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டு சென்று விடுவார் என்றும், அவரது வகுப்பை வேறொரு நபரை நியமித்து பாடம் எடுக்க செய்வார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
அதனையடுத்து, பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்துள்ளார். அதனை கண்டித்து மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் சேலம் - ஏற்காடு பிரதான சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் போராட்டம்
அதில், ஆசிரியர் முரளிதரனை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று மாணவர்கள் கோஷமிட்டனர். அதனைத் தொடர்ந்து போலீஸார் சமாதானம் பேசி மாணவர்களாஇ அப்புறப்படுத்தினர். இதுகுறித்து பள்ளி மேலாண்மை குழுவினர் கூறுகையில்,
ஆசிரியர் முரளிதரன் இந்த பள்ளிக்காக பொதுமக்களை சந்தித்து பெரும் தொகையை ஈட்டி பள்ளிக்கு பல்வேறு புதிய வகுப்பறைகள் கட்டிக் கொடுத்துள்ளார் என்றும், தனது வருமானத்தில் பெரும் பகுதி பள்ளிக்காகவே செலவிட்டவர், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரும்பங்கு ஆற்றியவர் என்றும் தெரிவித்தனர்.
பெற்றோர் ஆசிரியர் கழகம் நியமித்த ஆசிரியரை முரளிதரன் தனக்கு மாற்றாக நியமித்துள்ளதாக எண்ணி முதன்மை கல்வி அலுவலர் முருகன் மாணவர்களிடம் அவர் மீதான குற்றச்சாட்டை சொல்லிக் கொடுத்து எழுதி வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது.