இன்று முதல் ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை - அமைச்சர் அறிவிப்பு
இன்று முதல் சென்னையில் உள்ள 82 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை
தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலேசானை நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில்,
இன்று முதல் சென்னையில் மட்டும் 82 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். விரைவில் மற்ற மாவட்டங்களில் உள்ள ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும்.
ரேசன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவித்தார். பசுமை பண்ணை கடைகளில் தக்காளி கொள்முதல் நடவடிக்கையை அதிகரித்துள்ளோம்.
விலை உயராமல் இருக்க நடவடிக்கை
10 நாட்களுக்கு தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக தக்காளி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று தக்காளி விலை உயர்கிறது. அடுத்தாண்டு தக்காளி விலை ஏற்றம் வராதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.