கனவுல கூட நினைக்கல; என் மகன் உடல் மட்டும் கிடைக்காமல் போயிருந்தால்.. - சைதை துரைசாமி வேதனை!
தனது மகன் வெற்றி துரைசாமியின் நினைவேந்த நிகழ்ச்சியில் சைதை துரைசாமி உருக்கமாக பேசியுள்ளார்.
வெற்றி துரைசாமி மறைவு
சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இவர் கடந்த 4-ம் தேதி தனது உதவியாளர் கோபிநாத்துடன் இமாச்சலப் பிரதேசத்திற்கு சென்றிருந்தார்.
அவர்கள் இருவரும் வாடகை கார் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் சடலமாகவும், கோபிநாத் காயங்களுடனும் மீட்கப்பட்டார். இந்த விபத்தில் மாயமான வெற்றி துரைசாமியை தேடும் பணி கடந்த 8 நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று மீட்கப்பட்டது.
இதையடுத்து அவரது உடல் கடந்த 13-ம் தேதி விமானம் மூலமாக சென்னை கொண்டு வரப்பட்டு, பொது மக்களின் அஞ்சலிக்கு பிறகு தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் வெற்றி துரைசாமியின் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று சைதாப்பேட்டை உள்ள சைதை துரைசாமியின் இல்லத்தில் நடைபெற்றது.
சைதை துரைசாமி உருக்கம்
அப்போது பேசிய சைதை துரைசாமி "இந்த வாழ்க்கை துன்பம் மிக்கது. சோதனை மிக்கது என்று தெரிந்திருந்தும் நான் இதை பின்பற்றுகிறேன் என்றால் விதி வலியது என்பதை இறைவன் எனக்கு உணர்த்தி இருக்கிறான்.
இறையருள் இந்த குடும்பத்திற்கு இருக்கிறது என்றால் என் மகன் திரும்பி கிடைத்திருக்கிறான். அவன் உடல் கிடைக்காமல் போயிருந்தால் வாழ்க்கை துக்கத்தில், சோகத்தில் என்ன நடந்திருக்கும் என்றே தெரியாது. ஆகவே இறையருளால் என் மகன் உடல் கிடைத்திருக்கிறது. அப்படி என்றால் நான் செய்த காரியங்கள் எல்லாம் இறையருள் பெற்றதாக இருக்கிறது என உணர்ந்து இனி அதை விரிவாக்கம் செய்ய இருக்கிறேன்.
இந்த சமுதாயத்திற்காகவும், சமூகத்திற்காகவும் வாழ்வது தான் இந்த பிறப்பின், இந்த படைப்பின், இந்த வாழ்க்கையின் அடையாளம் என்பதை உணர்ந்து அதை நோக்கி நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். இப்படி நினைவேந்தல் நிகழ்ச்சி என் மகனுக்கு நடக்கும் என்று ஒருக்காலும் கனவில் கூட நினைக்கவில்லை'' என்று கணீர் மல்க பேசினார்.