அறிமுகப் போட்டியுடன் நாடு திரும்பிய தமிழக வீரர்; ஆரம்பமே இப்படியா..? ரசிகர்கள் ஏமாற்றம்!
இந்திய கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் அணியிலிருந்து விலகி நாடு திரும்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்தியா - ஜிம்பாப்வே
இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.
இதற்கு நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பதிலடி கொடுத்த இந்திய அணி, 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் முதல் முறையாக டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அறிமுகமானார்.
ஏனெனில், இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ஜெய்ஸ்வால், சிவம் துபே, சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஆனால், 2024 டி20 உலகக் கோப்பையை முடித்து விட்டு அவர்கள் ஜிம்பாப்வே பயணிக்க தாமதமானது.
சாய் சுதர்சன்
இதனால் சாய் சுதர்சன், ஹர்ஷித் ராணா மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகிய 3 வீரர்கள் முதல் 2 போட்டிகளுக்காக தேர்வு செய்யப்பட்டனர். இதில், முதல் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்காத சாய் சுதர்சனுக்கு இரண்டாவது போட்டியில் வாய்ப்பு கிடைத்தது.
இது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்தது. ஆனால், ருதுராஜ், அபிஷேக், ரிங்கு ஆகியோரே அந்த போட்டியில் அடித்து நொறுக்கியதால், அவருக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் ஜெய்ஸ்வால், சிவம் துபே, சஞ்சு சாம்சன் ஆகியோர் ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் இணைந்துள்ளனர்.
இதன் காரணமாக சாய் சுதர்சன் இந்திய அணியிலிருந்து விலகி நாடு திரும்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஏனெனில், கடைசி 3 போட்டிகளுக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. சாய் சுதர்சன் நாடு திரும்பியதும் 2024 டிஎன்பிஎல் தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan
