சபரிமலை அரவணை பாயாசத்தில் பூச்சி மருந்து; விநியோகம் நிறுத்தம் - பகீர்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு தரப்படும் அரவணை பாயாசத்தில் 14 வகையான பூச்சிமருந்துகளின் தன்மை இருப்பதாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
அரவணை பாயாசம்
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல, மகரவிளக்கு பூஜை காலங்களில் திறக்கப்படுகிறது. மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திறக்கப்பட்டு மண்டல பூஜை வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு தரப்படும் அரவணை பாயாசத்தில் தரமற்ற ஏலக்காய் பயன்படுத்தியது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அரவணை பாயாசத்தில் உள்ள ஏலக்காயில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப் பூச்சிமருந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நச்சு மருந்து
இதுமட்டுமின்றி அரவணை பாயாசம், அப்பம், நெய், விபூதி, குங்குமம் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த அரவணை பாயாசம் 100 ரூபாயாகவும், 1 பாக்கெட் அப்பம் ரூ.30-க்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 45 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து ஒரு தனியார் நிறுவனம் கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தது.
இந்த நிலையில் அரவணை பாயாசத்தில் உள்ள ஏலக்காயின் தன்மை குறித்துப் பரிசோதிக்க உணவுப் பாதுகாப்புதுறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் அரவணையில் 14 வகையான பூச்சி மருந்துகளின் தன்மை இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
தடை
இதை தொடர்ந்து, சாப்பிடத் தகுதி இல்லாத ஏலக்காய் கலந்த அரவணையை விற்பனை செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் கூறிய நிலையில், `ஏலக்காய் இல்லாத அரவணை தயாரித்து இன்று முதல் விநியோகம் செய்யப்படும்' என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்த கோபன் தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் நேற்று மாலை 5 மணியுடன் அரவணை விநியோகம் செய்வது நிறுத்திவைக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் ஆறு லட்சம் டின் அரவணை விற்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் சுமார் ஐந்து
கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுள்ளதாகக் கூறப்படுகிறது.