அந்த வீரரின் இடத்தை நான் நிரப்பனுமா? தோனி மாதிரி தான்.. ருதுராஜ் நச் பதில்!
விராட் கோலி குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் பேசியுள்ளார்.
இந்தியா - ஜிம்பாப்வே
இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.
இதற்கு இரண்டாவது போட்டியில் பதிலடி கொடுத்த இந்திய அணி, 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று மூன்றாவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. முன்னதாக டி20 உலகக்கோப்பை தொடருடன் ரோஹித், விராட் மற்றும் ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தனர்.
ருதுராஜ் கெய்க்வாட்
இதையடுத்து ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் ரோஹித் இறங்கும் இடத்தில் அபிஷேக் ஷர்மாவும், விராட் கோலி இறங்கும் 3-ம் வரிசையில் ருதுராஜ் கெய்க்வாட்டும் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் "விராட் கோலியின் இடத்தை நீங்கள் நிரப்புவீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் "இந்த தருணத்தில் விராட் கோலியுடன் ஒப்பிடுவது அல்லது அவருடைய இடத்தை நிரப்ப முயற்சிப்பது பற்றி சிந்திப்பது சரியானதல்ல.
ஏனெனில் அது மிகவும் கடினம். அது கிட்டத்தட்ட மஹி (தோனி) பாய் இடத்தை நிரப்புவது போன்றதாகும். நீங்கள் உங்களுடைய சொந்த கேரியரை துவக்க வேண்டும். உங்களின் சொந்த விளையாட்டை விளையாட வேண்டும். அதற்குத்தான் தற்போது நான் முன்னுரிமை கொடுக்கிறேன். அணி எங்கு விரும்புகிறதோ அங்கே நான் பேட்டிங் செய்வேன்" என்று தெரிவித்துள்ளார்.