வெடித்து சிதறிய செயற்கைகோள் - சுனிதா வில்லியம்ஸுக்கு என்ன ஆச்சு?
சர்வதேச விண்வெளி நிலையம் அருகே செயற்கைகோள் ஒன்று வெடித்து சிதறியுள்ளது.
சுனிதா வில்லியம்ஸ்
இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே 2 முறை விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ளார். விண்வெளி பயணம் செய்த பெண்களில் அதிக நேரம் விண்வெளியில் பயணம் செய்த சாதனையை (195 நாட்கள்) இவர் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் 3 வது முறையாக, கடந்த ஜூன் 5 ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலன் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் விண்வெளிக்கு புறப்பட்டு 6 ம் தேதி இரவு சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தார். 8 நாட்கள் தங்கி அங்கு ஆய்வு செய்து விட்டு பிறகு பூமிக்கு திரும்பி வர திட்டமிட்டிருந்தனர்.
ஒத்திவைப்பு
ஆனால் அவர்கள் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் வாயுக்கசிவு உள்ளிட்ட தொழில் நுட்பக் கோளாறுகள் ஏற்பட்ட காரணமாக பூமிக்கு வருவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூன் 26 பூமிக்கு கிளம்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது விண்வெளியில் மீண்டும் ஒரு எதிர்பாராத சிக்கல் எழுந்துள்ளது.
ரஷ்யா அனுப்பிய செயற்கைகோள் ஒன்று 2022 ல் செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டது. தற்போது அது சர்வதேச விண்வெளி மையத்தின் அருகே நூற்றுக்கணக்கான துண்டுகளாக வெடித்து சிதறி உள்ளது. இதனால் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வீரர்களை பாதுகாப்பு அறைக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் சுனிதா வில்லியம்ஸ் சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தில் உள்ள த்ரஸ்டரில் ஹீலியம் வாயு கசிவு காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் பூமிக்கு வருவது மீண்டும் தாமதம் ஆகியுள்ளது. சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருக்கும் போது இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.