கல்லூரி மாணவிகள் குழந்தை பெற்றால் ரூ.81,000 பரிசு - மக்கள் தொகையை அதிகரிக்க புதிய முயற்சி
குழந்தை பெற்றுக்கொள்ளும் கல்லூரி மாணவிகளுக்கு நிதியுதவி அளிக்க அரசு முன் வந்துள்ளது.
மக்கள் தொகை சரிவு
மக்கள் தொகை சரிவு உலகளவில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. சீனா, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகள் தங்கள் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ரஷ்யாவில் கடந்த 2024 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 599,600 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளது. இது ரஷ்யாவில் கடந்த 25 ஆண்டுகளில் பதிவான மிகக் குறைவான பிறப்புவிகிதம் ஆகும். இதை தேசத்தின் எதிர்காலத்திற்கு பேரழிவு என ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.
கல்லூரி மாணவிகள்
ரஷ்யாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள ரஷ்யா அரசு மேற்கொண்டு வருகிறது. அலுவலக இடைவேளை நேரங்களில் கூட உறவு வைத்து கொள்ளுங்கள் என ரஷ்யா அதிபர் புதின் பேசியிருந்தார்.
இந்நிலையில் ரஷ்யாவின் கரேலியா பகுதியில் குழந்தை பெற்று கொள்ளும் இளம் பெண்களுக்கு 1,00,000 ரஷ்யா ரூபிள் (இந்தியா மதிப்பில் ரூ.81,000) தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த பணத்தை பெறுவதற்கு அந்த பெண் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். மற்றும் கரேலியா பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும். மேலும், கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் முழு நேரம் படிப்பவராக இருக்க வேண்டும்.
நிதி தொகை உயர்வு
இதே போல் 11 பகுதிகளில் அரசாங்கங்கள் குழந்தை பெற்றெடுக்கும் மாணவிகளுக்கு நிதிச் சலுகைகளை வழங்குவதாகக் கூறப்படுகிறது.
ரஷ்யா தேசிய அரசாங்கம் கடந்த ஆண்டில் முதல் குழந்தை பெற்றுக்கொள்ளும் போது, 630,400 ரூபிளும் (இந்திய மதிப்பில் ரூ.5,29,519) , 2வது குழந்தை பெற்றுக்கொள்ளும் போது 833,000 ரூபிளும்(இந்திய மதிப்பில் ரூ.6,99,698) வழங்கி வந்தது.
2025 ஆம் ஆண்டு முதல் இந்த தொகையை உயர்த்தி முதல் குழந்தைக்கு 677,000 ரூபிளாகவும் (இந்திய மதிப்பில் ரூ.5,68,664) 2வது குழந்தைக்கு 894,000 ரூபிளாகவும் (இந்திய மதிப்பில் ரூ.7,50,939) வழங்கி வருகிறது.