திணறும் சென்னை ரயில்கள் - ரிசர்வேஷன் கோச்சில் எல்லை மீறும் பயணிகள்!
முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில், பயணிகளின் நெரிசல் அதிகரித்து வருகிறது.
கோடை விடுமுறை
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ், ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் செல்லும் ரயில்களில் பயணிகள் நெரிசல் கடுமையாக ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கோடை விடுமுறை என்பதால் கூட்டம் அலைமோதி வருகிறது.
ஜெனரல் கோச் மற்றும் ஸ்லீப்பர் கோச் பெட்டிகளை தான் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவை மிகவும் குறைந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படுவதால் மோசமான நிலையே தொடர்கிறது.
திணறும் பயணிகள்
சென்னையில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளில் நிற்க கூட இடமில்லாத அளவிற்கு கூட்டம் நிரம்பி வழிகிறது. அதிலும், ஜெனரல் கோச் டிக்கெட்கள், வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்களை எடுத்தவர்கள் முன்பதிவு பெட்டிகளில் ஏறிக் கொள்வார்கள்.
மேலும், தரையிலும் அமர்ந்து கொள்வார்கள். இந்நிலையில், விடுமுறையில் ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க வழக்கமான ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களில் கூடுதலாக ஜெனரல் கோச் மற்றும் ஸ்லீப்பர் கோச்களை இணைக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.