மாதம் ஒருமுறை மட்டுமே துவைக்கப்படும் ரயில்வே கம்பளிகள் - ஆர்டிஐயில் பகீர் தகவல்!
ரயில்களில் பயன்படுத்தப்படும் போர்வைகள் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தொடர் குற்றச்சாட்டு
ஒவ்வொரு நாளும் சுமார் 23 கோடி பயணிகள் ரயிலில் பயணிக்கின்றனர். இதில் லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், நேரம் கடைபிடிப்பதில்லை, போதிய ரயில்கள் இல்லை, கூடுதலான முன்பதிவில்லா பெட்டிகள் இல்லை என்று மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. ஏசி வகுப்புகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை துவைக்கப்படுகிறது என கேட்கப்பட்டுள்ளது.
ஆர்டிஐ தகவல்
இதற்கு பதிலளித்துள்ள ரயில்வே அமைச்சகத்தின் ஹவுஸ் கீப்பிங் மேலாண்மை (என்எச்எம்) பிரிவு அதிகாரி ரிஷு குப்தா, கீழே விரிக்க கொடுக்கப்படும் போர்வைகள் ஒவ்வொரு முறையும் துவைக்க அனுப்பி வைக்கப்படுவதாகவும், கம்பளிகள் மாதத்திற்கு ஒருமுறை துவைக்க அனுப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சில அதிகாரிகள், "கம்பளிகள் கனமானவை. அவற்றை துவைப்பது கடினமானது. எனவே, அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டிய நேரம் இது" என்று கூறியுள்ளனர். ரயிலில் பயன்படுத்தப்படும் போர்வை, கம்பளி, தலையணை உறை ஆகியவற்றை துவைக்க 46 சலவை மையங்கள் இருக்கின்றன.
தினமும் பயணிகள் பயன்படுத்திய கம்பளிகளை மற்றொரு பயணிகள் பயன்படுத்துவதன் மூலம், தோல் சார்ந்த நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.