இன்றைக்கு நாய் கூட பி.ஏ பட்டம் வாங்குகிறது; திராவிட இயக்கம் போட்ட பிச்சை - ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு
நீட் தேர்வு எதிர்ப்பு கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு பேசியுள்ளார்.
நீட் தேர்வு
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு போன்ற பிரச்சனைகளால் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிராக திமுக நெடுங்காலமாக போராடி வருகிறது.
நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார்.
ஆர்.எஸ்.பாரதி
இதில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, "மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவன் நான். பி.ஏ பட்டம் பெற்றாலே வீட்டின் முன்பு போர்டு மாட்டுவார்கள். காரணம் ஊரில் ஒரே ஒருவர் தான் பட்டம் பெற்றிருப்பர். இப்போ அப்படியா இருக்கு ? நம்ம ஊர்ல நாய் கூட பி.ஏ பட்டம் வாங்குற நிலைமை வந்துருச்சு. இப்போ யார் வீட்டு முன்பாவது போர்டு தொங்குதா இல்லை. இந்த வளர்ச்சிக்கு யார் காரணம் திராவிட இயக்கம் தான்.
ஆனால் எல்லாரும் பட்டம் பெறுவதை தடுப்பதற்கு தான் நீட் போன்ற நுழைவு தேர்வு வந்துள்ளது. இதை நான் மாநிலங்களவையிலே சொன்னேன். எங்கள் பட்டப்படிப்புகள் குலம், கோத்திரம் பெருமையால் வரவில்லை. திராவிட இயக்கமும், இட ஒதுக்கீடும் இல்லாமல் இருந்திருந்தால் எங்கள் பட்டப்படிப்புகள், டாக்டர் பட்டங்கள் திராவிட இயக்கம் போட்ட பிச்சை." என கூறியுள்ளார்.
இந்த சர்ச்சை பேச்சு குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், நாய், பிச்சை போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியதில் எந்த உள் நோக்கமும் இல்லை என விளக்கமளித்துள்ளார்.