சாப்பாடு பார்சலில் ஊறுகாய் இல்லை..கடுப்பான கஸ்டமர் - உணவகத்துக்கு வைத்த ஆப்பு!
பார்சல் உணவில் ஊறுகாய் வைக்காத உணவகத்துக்கு அபராதம் விதிக்கபட்டுள்ளது.
சாப்பாடு பார்சல்
விழுப்புரம் மாவட்டம் அருகே உள்ள வழுதரெட்டி பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்கத்தின் மாநில தலைவராகவும் இருக்கிறார். இவர் கடந்த 2022ம் ஆண்டு விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு உணவகத்துக்கு சென்றுள்ளார்.
அங்கு அன்னதானம் வழங்குவதற்காக 25 பார்சல்களை வாங்கியிருக்கிறார். பார்சல் உணவு என்றால் ரூ.80 எனவும், பார்சலில் சாதம், சாம்பார், கார குழம்பு, ரசம், மோர், கூட்டு, பொறியல், அப்பளம், வாழை இலை, கவர் மற்றும் ஊறுகாய் 1 ரூபாய் பொட்டலம் என 25 சாப்பாடு கொடுப்பதாக கூறியுள்ளார்.
இதன்படி, 25 சாப்பாட்டுக்கு ரூ.80 வீதம் ரூ.2 ஆயிரத்தை ஆரோக்கியசாமி கொடுத்து பார்சல் வாங்கியிருக்கிறார். ஒட்டலில் ஒரிஜினல் பில் கொடுக்காமல் பேப்பரில் உணவு பொட்டலத்திற்கான பில் கொடுத்துள்ளனர். பார்சல் உணவுகளையும் ஒரு சாக்குப்பையில் கட்டி ஹோட்டல் ஊழியர்கள் கொடுத்து இருக்கிறார்கள்.
ஊறுகாய் இல்லை..
அப்போது, பார்சல் உணவுடன் வழங்க வேண்டிய ஊறுகாய் இல்லாமல் இருப்பதை கவனித்துள்ளார். இது பற்றி உரிமையாளரிடம் கேட்டுள்ளார். அதுமட்டுமின்றி, வைக்க மறந்த ஊறுகாய்க்குரிய தொகையான 25 ரூபாயை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.
ஆனால் ஹோட்டல் உரிமையாளர் அதை திருப்பி கொடுக்க மறுத்ததால், மன உளைச்சலுக்கு ஆளான ஆரோக்கியசாமி இது தொடர்பாக விழுப்புரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
அதாவது, ஆரோக்கியசாமி வாங்கிய பார்சல் உணவில் ஊறுகாய் வைக்காதது சேவை குறைபாடு ஆகும். எனவே ஆரோக்கியசாமிக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்காக 30 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரமும், ஊறுகாய் பொட்டலம் 25-க்குரிய தொகை ரூ.25-ம், தொகைக்குரிய ஒரிஜினல் ரசீதும்,
தீர்ப்பு வழங்கிய 45 நாட்களுக்குள் அபராத தொகையாக ஹோட்டல் உரிமையாளர் செலுத்த வேண்டும். தவறினால் மாதம் ஒன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் பணம் செலுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.