சென்னையில் வர உள்ள ரோப் கார் திட்டம் - எந்த பகுதியில் தெரியுமா?
சென்னை மெரினா கடற்கரையில் இருந்து பெசன்ட் நகர் வரை சில நிமிடங்களில் சென்று வர கூடிய ரோப் கார் திட்டத்தை அதிகாரிகள் முன் மொழிந்துள்ளனர்.
ரோப் கார் திட்டம்
சென்னையில் மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல் படுத்தி வருகிறது. இந்த வகையில் நாட்டின் மிக நீண்ட கடற்கரையான மெரினா கடற்கரையை பெசன்ட் நகருடன் இணைக்கும் வகையில், 4.6 கி.மீ. தூரத்திற்கு ரோப் கார் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னையில் கடற்கரை சுற்றுலாவை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் எனச் சொல்லப்பட்டாலும்,. நகரின் போக்குவரத்து நெரிசலை பெரியளவில் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலைகள் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் லிமிடெட் (NHLML) என்ற நிறுவனம் 285 கோடி ரூபாய் மதிப்பில் விரிவான சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரிக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுளது.
அரசு அனுமதி
தமிழக அரசு இத்திட்டத்திற்கு கொள்கை ரீதியான முதல் கட்ட அனுமதியை ஏற்கனவே வழங்கி விட்டதாகவும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் விரிவான சாத்தியக்கூறு அறிக்கை பணிகளை முன்கூட்டியே தொடங்க முடியவில்லை, தேர்தல் நடத்தை விதிகள் நீக்கப்பட்ட உடன் இதற்கான பணிகள் தொடங்கபடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், விரிவான சாத்திய கூறு அறிக்கை இறுதி செய்யப்பட்ட உடன், இத்திட்டத்திற்கு டெண்டர் விடப்படும். சுற்றுச்சூழல் துறை, காலநிலை மாற்றம் அமைச்சகத்திடம் இருந்து அனுமதி பெற்ற பின் , நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறும். இப்பணிகள் முடிந்து விட்டால் 2 ஆண்டுகளில் திட்டம் பயன்பாட்டுக்கு வந்து விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே கடந்த 2022 ம் ஆண்டு சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் நேப்பியர் பிரிட்ஜ் முதல் விவேகானந்தர் இல்லம் வரை ரோப் கார் அமைக்க மாநகராட்சி முன்மொழிந்தது. தற்போது வரை அத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை.