ஒரே மேட்ச் - 7 வரலாற்று சாதனை!! தோனி, விராட் சாதனைகளை ஊதி தள்ளிய ரோகித்!!
நேற்று நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
முதல் டி20 போட்டி
உலகக்கோப்பையில் தனது முதல் போட்டியில் இந்தியா அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்த இந்திய அணி எதிர்பார்த்ததை போலவே அயர்லாந்து அணிக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது.
துவக்கம் முதலே தடுமாறிய அயர்லாந்து வீரர்கள் வரிசையாக அவுட்டாகினர். கரேத் டெலானி(Gareth Delany) அதிகபட்சமாக 26 ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மொத்தமாக அந்த அணி 16 ஓவர்களில் 96 ரன்களில் அவுட்டானது.
பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா அணி கேப்டன் ரோகித் சர்மா ஆரம்பம் முதலே அதிரடி காட்டி விளையாடினார். 37 பந்துகளில் அவர் 52 ரன்களை விளாச, ரிஷாப் பண்ட் தனது பங்கிற்கு 36 ரன்களை சேர்க்க இந்தியா அணி 12.2 ஓவர்களில் இலக்கை எட்டியது.
ரோகித் சாதனை
இப்போட்டியில் இந்தியா அணி கேப்டன் ரோகித் சர்மா அடுத்தடுத்து 7 சாதனைகளை படைத்துள்ளார். இப்போட்டியில் குவித்த 52 ரன்களின் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்தார்.
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி 2-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார் ரோகித். அவர், 4026 ரன்கள் விளாசியுள்ளார். உடன் சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் 4000 ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையையும் ரோகித் பெற்றுள்ளார்.
அதே சமயம், ஒரு நாள் - டெஸ்ட் மற்றும் சர்வதேச டி20 என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் தனித் தனியாக 4000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை செய்துள்ளார் ரோகித். இந்திய அணியின் கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்று இருக்கிறார்.
முன்பு தோனி இந்திய அணியின் கேப்டனாக 42 வெற்றிகளை பெற்றுக் கொடுத்த நிலையில், ரோகித் சர்மா 43 வெற்றிகளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல, டி20 உலக கோப்பை தொடரில் மட்டும் 1000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரோகித் சர்மா. அதே போல, சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 600 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற இமாலய சாதனையை படைத்திருக்கிறார்.
கூடவே ஐசிசி தொடர்களில் 100 சிக்ஸர்களை அடித்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் செய்து காட்டியுள்ளார்.