சச்சினின் 3 சாதனைகளை முறியடித்த ரோஹித் சர்மா - சிக்ஸரிலும் சாதனை
ரோஹித் சர்மா இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் 4 சாதனைகளை படைத்துள்ளார்.
இங்கிலாந்து தொடர்
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 T20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி, முதலாவது ஒரு நாள் போட்டியிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா வெற்றி
இதனையடுத்து நேற்று(09.02.2025) ஒடிசாவின் பர்பாத்தி மைதானத்தில் 2வது ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிரடியாக ஆடிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக பென் டக்கெட் 65 ரன்களும், ஜோ ரூட் 69 ரன்களும் குவித்தனர். 305 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி, 44.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 119 ரன்கள் அடித்தார்.
அதிக சதம்
இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் 30 வயதுக்கு மேல் சர்வதேச போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். 35 சதங்களுடன் முதலிடத்தில் இருந்த சச்சினை 36 சதமடித்து ரோஹித் சர்மா இந்த பட்டியலில் பின்னுக்கு தள்ளியுள்ளார்.
மேலும் தொடக்க ஆட்டக்காரராக அதிக 50+ ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை சச்சின் 120 50+களுடன் தன்வசம் வைத்திருந்தார். தற்போது 121 50+ எடுத்து ரோஹித் சர்மா இதிலும் முதலிடத்திற்கு வந்துள்ளார்.
அதிக சிக்ஸ்
அதே போல் அனைத்து வடிவ போட்டிகளிலும் இந்தியாவிற்காக தொடக்க ஆட்டக்காரராக அதிக ரன்கள் குவித்த வீரர் பட்டியலில் 15,335 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர் இரண்டாவது இடத்தில் இருந்தார். தற்போது 15,404 ரன்களைக் குவித்து ரோஹித் சர்மா 2வது இடத்தைப் பிடித்துள்ளார். 15,758 ரன்களுடன் வீரேந்திர சேவாக் முதலிடத்தில் உள்ளார்.
இந்த போட்டியில் 7 சிக்ஸ் அடித்த ரோஹித் சர்மா இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற பட்டியலில் 2வது இடத்தில் இருந்த கிறிஸ் கெயிலை பின்னுக்கு தள்ளியுள்ளார். தற்போது தற்போது 331 சிக்சருடன் கிறிஸ் கெயில் 3வது இடத்திலும், 338 சிக்சருடன் ரோஹித் சர்மா 2வது இடத்திலும் உள்ளனர். 351 சிக்சருடன் பாகிஸ்தானை சேர்ந்த ஷாஹித் அப்ரிடி முதலிடத்தில் உள்ளார்.