T20 World cup; அணிச்சேர்க்கை பற்றி நான் பேச விரும்பவில்லை - கேள்விக்கு தடுமாறிய ரோஹித்!
டி 20 இந்திய அணி சேர்க்கை குறித்து வெளிப்படையாக பேச முடியாது என்று ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.
அணிச்சேர்க்கை
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை நேற்று பிசிசிஐ அறிவித்தது.
இதில் ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல், அர்ஷிதீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், மாற்று வீரர்களாக சுப்மான் கில், கலீல் அகமது, அவேஷ் கான், ரிங்கு சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆனால், ஒரு தமிழக வீரர் கூட அணியில் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தடுமாறிய ரோஹித்
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தேர்வுகுழுத் தலைவர் அஜித் அகர்கர் இருவரும் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அணி தேர்வு செய்யப்பட்டிருப்பதை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அவர், அணிச்சேர்க்கை பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை.
ஏனெனில், எதிரணிக்காரர்கள் எல்லாருமே இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பை கவனித்துக் கொண்டிருப்பார்கள். நான் நான்கு ஸ்பின்னர்கள் வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தோம். காலை 10 அல்லது 10:30 மணிக்கு போட்டிகள் தொடங்கும் என நினைக்கிறேன். தொழில்நுட்பரீதியாக இதில் சில காரணங்களும் இருக்கிறது.
என்னால் இப்போது அதைப் பற்றி வெளிப்படையாக பேச முடியாது. ஆனால், நான்கு ஸ்பின்னர்களை அழைத்து செல்வதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸில் முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் உங்களை சந்திக்கும்போது அதைப்பற்றி விரிவாக பேசுகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.