கடைசி வரைக்கும் அவர் ஆசை நிறைவேறாமலேயே போச்சு - மனோஜ் இறப்பு குறித்து ரோபோ சங்கர்!
மனோஜ் ஆசை நிறைவேறாமல் போனதாக ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்.
மனோஜ் மறைவு
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ்(48). சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டில் இருக்கும்போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அங்கேயே அவர் காலமானார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிம்ஸ் மருத்துவமனையில் மனோஜ் பாரதிராஜாவிற்கு ஓப்பன் ஹார்ட் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அதன் பிறகு, வீட்டில் இருந்தவாறு சிகிச்சை எடுத்து கொண்டு ஓய்வில் இருந்துள்ளார். இரண்டு, மூன்று தினங்களாக உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவரது உடலுக்கு திரைபிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் ரோபோ சங்கர் அவரது மனைவியுடன் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரோபோ சங்கர்,
ரோபோ சங்கர் உருக்கம்
"மனோஜ் பாரதிராஜா சாரோட இழப்பு எங்களுக்கு மிகப் பெரியது. 48 வயசுல இறப்பா அப்படின்னு கேட்டப்போ எனக்கே பதறுது. நான் சென்னைக்கு 2000ல வரும் போது உலகத்திலேயே என்னோட முதல் ரசிகனா இருந்தது இவர் தான். எனக்கு போன் பண்ணி பாரதிராஜா சார் பையன் பேசுறன்னு சொல்லி ஒரு பெரிய ஆச்சரியத்த கொடுத்தாரு.
டேய் உலகத்துல யாரு கேட்டாலும் உனக்கு நடிகர்கள்ல முதல் ரசிகன் நான் தான் டா அப்படின்னு சொல்லி ஒரு முக்கால் மணி நேரம் பேசினாரு. அப்போ இருந்து இப்போ வரைக்கும் இது ஒரு குடும்ப ரீதியான நட்பாக மாறிடுச்சு. எனக்கு எப்போ போன் பண்ணினாலும் என்ன கடவுளேன்னு தான் கூப்பிடுவாரு. என் மனைவிய தெய்வமேன்னு சொல்லுவாரு.
ஒவ்வொரு முற என் மனைவிய பாக்கும் போது, ஒருமுறையாவது எனக்கு உன் கையால மதுரை ஸ்டைல் சாப்பாடு செஞ்சு கொடும்மான்னு தான் சொல்லுவாரு. உன் கையால நாட்டுக் கோழி கொழம்பு.. மட்டன் சுக்கா எல்லாம் சாப்பிடனும்ன்னு சொல்லுவாரு. எப்போ தான் எனக்கு சமைச்சு தரப்போறன்னு விருமன் பட ஷூட்டிங் அப்போ கூட கேட்டாரு.
ஒவ்வொரு முறையும் அண்ணே வீட்டுக்கு வாங்க சமைச்சு தர்றேன்னு சொல்லிட்டே இருப்பேன். கடைசி வரைக்கும் அந்த ஆசை நிரைவேறாம போயிடுச்சு. பாக்கும் போது மனசே பதறுது. அவரோட ஆத்மா சாந்தி அடையட்டும். அதற்காக இறைவனை பிராத்திப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.