திரைப்படத்திற்கு டப் கொடுத்த சம்பவம்.. ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த பயங்கர கொள்ளை!
ஏடிஎம்மில் பணம் நிரப்ப வந்த ஊழியர்களை சுட்டு கொலை செய்துவிட்டு பணப் பெட்டியைக் கொள்ளையர்கள் தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா
கர்நாடகா மாநிலம், பீதர் நகரில் சிவாஜி சவுக் நகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இதன் அருகே எஸ்பிஐ ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் பணம் நிரப்புவதற்காக சிஎம்எஸ் ஏஜென்சியின் ஊழியர்கள் 2 பேர் வாகனத்தில் வந்துள்ளனர்.
இதனையடுத்து,வாகனத்தைச் சாலையோரமாக நிறுத்திவிட்டு இருவரும் பணப்பெட்டியை எடுத்துள்ளனர்.அப்போது திடீரென கருப்பு ஜாக்கெட் மற்றும் தொப்பி அணிந்த அடையாளம் தெரியாத மர்ப 2 பேர் இருசக்கர வாகனத்தில் அப்பகுதிக்கு வந்துள்ளனர்.
மேலும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஏடிஎம் ஊழியர்களின் கண்களில் மிளகாய்ப்பொடியைத் தூவி அவர்களிடம்இருந்த பணப்பெட்டியை எடுத்துள்ளனர். அதன்பிறகு, ஊழியர்கள் இருவரையும், நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தள்ளினர். உடலில் தோட்டாக்கள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சுட்டு கொலை
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த சம்பவம் தொடர்பாகத் தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் ஏடிஎம் ஊழியர்கள் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரனையில் 90 லட்சம் ரூபாய்கொள்ளை போயிருப்பது தெரியவந்துள்ளது.