என்னா வெயிலு... திருட வந்த வீட்டில் குளித்து இளைப்பாறிய திருடன் - தூத்துக்குடியில் ருசிகரம்!
திருட வந்த வீட்டில் கொள்ளையன் குளித்து ஓய்வெடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளை சம்பவம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சாலைபுதூரைச் சேர்ந்தவர் நீலாபுஷ்பா (60). வீட்டில் தனியாக வசித்து வரும் இவர், பனங்கிழங்கு வியாபாரம் செய்து வருகிறார். இதனால் கடந்த 23-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு வியாபாரத்துக்கு சென்றுள்ளார்.
மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த ரூ.2 லட்சம் பணம் மற்றும் 3¼ பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தட்டார்மடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இளைப்பாறிய திருடன்
அதில், நீலாபுஷ்பா வீட்டில் பனங்கிழங்கு விலைக்கு வாங்கி, விற்பனை செய்து வந்த ஜெயக்குமார் (46) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், அன்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் திருட வந்த வீட்டில் ஜெயக்குமார் குளித்துவிட்டு இளைப்பாறியதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் நகை, பணத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். திருட வந்த வீட்டில் கொள்ளையன் குளித்து ஓய்வெடுத்த செய்தி அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.