திடீரென டெல்லி கிளம்பிய ஆளுநர் - பொன்முடிக்கு மீண்டும் சிக்கல்!
தமிழக ஆளுநர் ரவி டெல்லி சென்றுள்ளார்.
ஆளுநர் ரவி
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை மற்றும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
சிறை தண்டனை பெற்றதால், பொன்முடி தனது அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை இழந்தார். அதன்பின் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில், அந்த வழக்கு விசாரணையில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், மறுபடியும் திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவாக தொடர்கிறார்.
பொன்முடி பதவி பிரமாணம்
தொடர்ந்து, அவரை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்குமாறு முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவிக்கு பரிந்துரை கடிதம் எழுதியிருந்தார். இன்றைக்குள் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க கோரிக்கை விடுத்து சுப்ரீம் கோர்ட்டின் நகலையும் தன்னுடைய கடிதத்துடன் இணைத்துள்ளார்.
ஆனால், திடீரென இன்று காலை 6.30 மணியளவில் ஆளுநர் ரவி டெல்லி புறப்பட்டு சென்றார். 16ம் தேதி மீண்டும் டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார்.
வழக்கமான பணிகளை மேற்கொள்வதற்காக, ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடியே அவர் அங்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்றைய தினம் பொன்முடி அமைச்சராக மறுபடியும் பதவியேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.