செந்தில் பாலாஜி ராஜினாமா - ஆளுநர் உடனடி ஒப்புதல்!
செந்தில் பாலாஜியின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
செந்தில் பாலாஜி ராஜினாமா
சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார்.
தொடர்ந்து, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. செந்தில்பாலாஜி, ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆளுநர் ஒப்புதல்
ஏழு மாதங்களுக்கு மேலாக 15 தடவைக்கு மேல் ஜாமின் மனு கேட்டு, அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபடியே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, கடிதத்தை சிறை அதிகாரி வழியாக முதல்வருக்கு அனுப்பி வைத்தார்.
ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பிவைத்து, அதை ஏற்றுக் கொண்டு செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து விடுவிக்குமாறு முதல்வர் பரிந்துரை செய்திருந்தார். அதனையடுத்து, தற்போது செந்தில் பாலாஜியின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முன்னதாக, செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதை விரும்பாத ஆளுநர் ரவி, அப்போதே அவர் அமைச்சராக தொடர சம்மதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.