அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு - உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு தொடர்பான வழக்கை அடுத்த வாரம் நவம்பர் 28ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது
அமைச்சர் செந்தில் பாலாஜி
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டு , புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்னர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் பலமுறை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தொடர்ந்து அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு, நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டு வந்தது. கடந்த 10ம் தேதி செந்தில் பாலாஜிக்கு சிறையில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததன் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனை தொடர்ந்து உடல்நிலையை காரணம் காட்டி கடந்த 10ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 19ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.
வழக்கு ஒத்திவைப்பு
உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரின் ஜாமீன் மனு கடந்த ஆக்டொபர் 30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ஆனால் அந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராக முடியாத சூழல் ஏற்பட்டதை அடுத்து, வழக்கின் விசாரணையை வரும் ஒத்திவைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில் மனு மீதான விசாரணை இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி," அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்களை தாக்கல் செய்துள்ளோம்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூளை எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை, கண்காணிப்பு தேவைப்படுகிறது" என்றார். மேலும், உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை விடுத்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எடுக்கப்பட்ட எம்ஆர்ஐ அறிக்கை எங்கே என நீதிபதி திரிவேதி கேள்வி எழுப்பியுள்ளாார். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு தொடர்பான வழக்கை அடுத்த வாரம் நவம்பர் 28ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.