Aarudhra Scam - பல மாத தலைமறைவிற்கு பிறகு தமிழகம் திரும்பிய ஆர்.கே.சுரேஷ்!!
ஆருத்ரா மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நபராக இருக்கும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், பல மாதங்களுக்கு பிறகு தமிழகம் திரும்பியுள்ளார்.
ஆர்.கே.சுரேஷ் - ஆருத்ரா பண மோசடி
சென்னை அமைந்தகரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்ததை நம்பி லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர்.
ஆனால், பணத்தைத் திரும்பச் செலுத்தவில்லை என முதலீடு செய்தவர்கள் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசில் புகாரளிக்க வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய கூடுதல் டி.ஜி.பி. அபின் தினேஷ் மோடக், ஐ.ஜி. ஆசியம்மாள், எஸ்.பி. மகேஷ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசாரால் அந்நிறுவனத்தை சேர்த்த பலர் கைது செய்தனர்.
நிறுவனத்தின் இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில் குமார், நாகராஜ், அய்யப்பன், ரூசோ, பாஜக நிர்வாகி ஹரிஷ், மாலதி, ராஜா உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை வருகை
இந்த வழக்கில் மற்றொரு நபராக பாஜகவின் ஓபிசி பிரிவு மாநிலத் துணைத் தலைவராக இருந்து வரும் நடிகரும் தாயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ்ஷிற்கு கைது செய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்தான விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியும் ஆர்.கே. சுரேஷ் ஆஜர் ஆகவில்லை.
மேலும், அவர் தரப்பில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய உத்தரவிட வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட 4 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மோசடி புகாரில் தலைமறைவாக இருந்து வரும் நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே. சுரேஷின் வங்கிக் கணக்குகளை முடக்கி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தான் சென்னைக்கு வந்து விசாரணைக்கு ஆஜராகும் வரை கைது செய்ய கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் ஆர்.கே.சுரேஷ் தொடர்ந்த வழக்கில், வரும் டிசம்பர் 12 ஆம் தேதி ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், அதுவரை அவரை கைது செய்ய கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதனை தொடர்ந்து தான் தலைமறைவாக இருந்து வந்த ஆர்.கே.சுரேஷ் இன்று காலை துபாயில் இருந்த சென்னை விமான நிலையம் வந்தார்.
ஏற்கனவே லுக் அவுட் நோட்டீஸ் இருக்கும் காரணத்தால், குடியுரிமை அதிகாரிகள் விமான நிலையத்தில் ஆர்.கே சுரேஷிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது தான் இந்த வழக்கின் விசாரணைக்குதான் வந்திருப்பதாக ஆர்,கே.சுரேஷ் கூற, அவரை போலீசார் வீட்டிற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.