எப்படியும் என்னைக் கொன்னுடுவாங்க; ஓய்வு பெற்ற எஸ்.ஐ பகீர் வீடியோ வைரல்!
கொலை செய்யப்படுவதற்கு முன்பு ஓய்வு பெற்ற எஸ்.ஐ வெளியிட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.
நிலத்தகராறு?
நெல்லை டவுன், தைக்கா தெருவில் வசித்து வந்தவர் ஜாகிர் உசேன் என்கிற பிஜிலி (60). இவர், டவுன் ஜாமியா தைக்கா தெருவில் உள்ள பள்ளி வாசலுக்கு தொழுகைக்காக பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல், ஜாகிர் உசேனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. தகவலறிந்து விரைந்த போலீஸார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து கொலை தொடர்பாக, டவுன் பகுதியைச் சேர்ந்த அக்பர்ஷா (32), தச்சநல்லூரைச் சேர்ந்த கார்த்திக் (32) ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேனுக்கும் நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்கிற தௌபிக் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. அந்த முன்விரோதத்தில்தான் ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தனிப்படை
முன்னதாக ஜாகீர் கொலை செய்யப்படுவதற்கு முன் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில், `தமிழக முதல்வருக்கு வணக்கம். தமிழகத்தில் வாழ்கிற கோடிகணக்கான மக்களில் ஒரு மூலையில் நான் வசித்து வருகிறேன். மரணிக்கிற நேரத்தில் நன்மையாக காரியங்களை செய்து வருகிறேன்.
இதை நான் சொல்ல வேண்டியதில்லை. அந்த ஏரியாவில் உள்ள மக்களே சொல்வார்கள். விசாரணை செய்யுங்கள். விசாரிக்க மாட்டீர்கள். எனக்கு கொலை மிரட்டல், 30-க்கும் மேற்பட்ட கும்பல் கொலை செய்ய சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். முக்கியமான நபர் தௌபிக்.
இந்த கொலை மிரட்டலுக்கு முக்கிய காரணம் நெல்லை டவுன் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், உதவி கமிஷனர் செந்தில்குமார். தௌபிக் என் மீது பொய் புகார் கொடுக்கிறார். அதில் என் மீதும் என் மனைவி மீதும் பிசிஆர் வழக்கு போட்டிருக்கிறார்கள். சாகப்போகிற நான் என்னவேண்டும் என்றாலும் பேசலாம்.
எப்படியும் என்னைக் கொன்னுவிடுவாங்க'என எனக்குத் தெரியும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.