சோனாலி போகட் ரகசிய மனைவியாக வாழ்ந்தாரா? மரண வழக்கில் ட்விஸ்ட்!
சோனாலி போகட் மரண வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
சோனாலி போகட்
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நடிகை சோனாலி போகட் கடந்த சில நாட்களுக்கு முன் 2 பேருடன் கோவா சென்றிருந்தார். அங்கு கடந்த 22-ஆம் தேதி சோனாலி போகட் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அவர் மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்டது. இதற்கிடையே கோவாவிற்கு சோனாலி போகட்டுடன் சென்றிருந்த இருவர் தான் கொலை செய்திருப்பதாக அவரது சகோதரர் போலீசில் புகார் அளித்தார்.
பிரேத பரிசோதனை
அவரது புகாரின் பேரில் சுதிர் சக்வான், சுக்விந்தர் வாசி ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் கோவாவில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் நடந்த ஒரு பார்ட்டியின் போது சோனாலி போகட்டுக்கு குளிர்பானத்தில் போதைப்பொருளை கலந்து கொடுத்ததாக கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே சோனாலி போகட்டின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில், சோனாலி போகட்டின் உடலில் ரத்த காயங்கள் அல்லாத தாக்குதல் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
உதவியாளர் சுதிர் சங்வான்
நைட் கிளப்பில் சோனாலி போகட் வலுக்கட்டாயமாக மதுவை குடிக்க வைப்பது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியானது. நைட் கிளப்பில் அனைவரும் நடனமாடி கொண்டு இருக்கும் நேரத்தில் சோனாலி போகட் அருகில் நிற்கும் ஒரு நபர் அவரை வலுக்கட்டாயமாக குடிக்க வைக்கிறார்.
அந்த நபர் சுதிர் சங்க்வான் போல தெரிந்ததாக கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, போதை பொருள் வியாபாரி ராம மந்த்ரேகர், உதவியாளர் சுதிர் சங்வான், அவரது நண்பர் சுக்விந்தர் சிங், நடைபாதை வியாபாரி தத்தபிரசாத் கவுங்கர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கணவன் - மனைவி
இந்நிலையில், குர்கிராமில் உள்ள செக்டார் 102ல் அமைந்துள்ள குர்கான் கிரீன்ஸ் சொசைட்டி குடியிருப்பில் போலீசார் சோதனையிட்டனர். அங்கு குடியிருப்பு வாடகை ஆவணங்களில் சோனாலி போகத்தின் கணவர் சுதிர் சங்வான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் இருவரும் இந்த குடியிருப்பில் கணவன், மனைவியாக வாழ்ந்தது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த குடியிருப்புக்கு சுதிர் சங்வான் அடிக்கடி வந்து சென்றதையும், அப்பகுதியினர் உறுதிபடுத்தி உள்ளனர்.
கோவாவுக்குப் புறப்பட்டு செல்வதற்கு முன், சோனாலி போகத்தும், சுதிர் சங்வானும் ஒரே காரில் விமான நிலையத்திற்குச் சென்றுள்ளனர். இதற்கிடையே சோனாலியின் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைக்க உள்ளதாக கோவா மாநில முதல்வர் சாவந்த் தெரிவித்துள்ளார்.