குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்கள் அலட்சியமா - கண்ணீர் வடிக்கும் பெற்றோர்... நடந்தது என்ன?
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் மருத்துவமனை அலட்சியம் காட்டியுள்ளதாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
குழந்தைக்கு அறுவை சிகிச்சை
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தஸ்தகீர் இவருக்கு வயது 32. இவருக்கு 1.5 கிலோ எடையில் குறைமாத பிரசவத்தில் ஆண் குழந்தை முகமது மகிரின் பிறந்துள்ளான்.
குழந்தை முகமது மகிரினுக்கு மூளையில் செரிப்ரோஸ்பைனல் திரவம், நரம்பியல் கோளாறு, ஹைட்ரோகெபாலக்ஸ் உட்பட பல உடல்நலப் பிரச்சினைகள் இருந்துள்ளது. இதையடுத்து குழந்தைக்கு கடந்த மாதம் தலையில் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை முடிந்த பின் குழந்தை வீடு திரும்பிய நிலையில் கடந்த மாதம் 25 ஆம் தேதி குழந்தையின் தலையில் பொருத்தப்பட்டிருந்த டியூப் இயற்கை உபாதை கழிக்கும் போது வெளியே வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அங்கு குழந்தையின் உடல்நிலையை கண்காணித்த மருத்துவர்கள் உடனடியாக அன்று இரவே மீண்டும் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
நிறம் மாறிய குழந்தையின் வலது கை
பின்னர் குழந்தை முகமது மகிரினுக்கு இரண்டு கைகளிலும் டிரிப்ஸ் ஏற்பட்டப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்தான்.
இதையடுத்து குழந்தைக்கு கடந்த 29 ஆம் தேதி வலது கையில் டிரிப்ஸ் மூலம் மருந்து செலுத்தியுள்ளனர். அப்போது குழந்தையின் கை திடீரென சிவப்பு நிறத்தில் மாறியுள்ளது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் அஜிஷா செவிலியர்களிடம் இது பற்றி தெரிவித்துள்ளார். அதற்கு அவர்கள் இது ஒரு பிரச்சனை இல்லை என தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறிய சில மணி நேரத்திலேயே குழந்தையின் கை முழுவதும் நிறம் மாற தொடங்கியது. இதனால் பதறிப்போன தாய் அஜிஷா நரம்பியல் மருத்துவரிடம் கொண்டு சென்ற போது குழந்தையின் கையை அகற்ற வேண்டும் என்றும் அப்படி செய்யவில்லை என்றால் குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று கூறி எழுப்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கை அகற்றம் - விசாரணை குழு அமைப்பு
பின்னர் குழந்தையின் வலது கையின் தோள்பட்டை வரை முழுவதுமாக அகற்றப்பட்டது. செவிலியர்களின் கவனக்குறைவே குழந்தையின் கை அழுகியதற்கு காணரம் என குழந்தையின் தாய் அஜிஷா மற்றும் அவரது தந்தை தஸ்தகீர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் விசாரணை நடத்த 3 பேர் கொண்டு விசாரணை குழுவை அமைத்துள்ளது தமிழக சுகாதாரத்துறை.
இந்த குழு இன்று முதல் விசாரணையை தொடங்குகின்றனர், தவறான சிகிச்சை தொடர்பாக, அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணை குழு 2 தினங்களில் கை அகற்றப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவமனை அலட்சியம் - தாய் கதறல்
செய்தியாளர்களை சந்தித்த குழந்தையின் தாய் அஜிஷா, தனது மகனின் கை பறிபோனதற்கு காரணம் மருத்துவமனையின் அலட்சியம் தான்.
எனது மகனின் கை பறிபோனதற்கு அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். தனியார் மருத்துமனை வேண்டாம் என்று தான் அரசு மருத்துவமனைக்கு வந்தோம்.
இங்கு அதிக வீரியமான மருந்துகளை கொடுத்து கையை அழுக தைவ்து விட்டனர் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குழந்தை கை அகற்றப்பட்ட விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராக குழந்தையின் பெற்றோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காவல் நிலையத்தில் தாய் புகார்
நாளை காலை 10 மணிக்கு குழந்தையின் பெற்றோர் உரிய ஆவணங்களுடன் விசாரணைக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குழந்தையின் பெற்றோர் தஸ்தகீர் - அஜிஷா தம்பதிக்கு விசாரணை அதிகாரி சம்மன் அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் குழந்தையின் பெற்றோர் ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர், செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.