இனி பாஸ்போர்ட்டுக்கு இந்த சான்றிதழ் கட்டாயமில்லை - அவசியம் தெரிஞ்சுக்கோங்க
பாஸ்போர்ட்டுக்கு திருமணச் சான்றிதழ் கட்டாயம் இல்லை என புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட்
கடந்த மார்ச் மாதம், பாஸ்போர்ட் சட்டம் 1980 விதிகளில் மத்திய வெளியுறவு அமைச்சகம் திருத்தம் செய்திருந்தது. அதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்,
"கடந்த, 2023ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள், புதிதாக பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம். மாநகராட்சி, நகராட்சி போன்றவை அல்லது அதற்கு நிகரான அமைப்புகள் வழங்கும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் மட்டுமே பிறப்பு சான்றிதழ் ஆவணமாக ஏற்கப்படும்.
அரசிதழில் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புதிய நடைமுறையை வெளியுறவு அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.
புதிய நடைமுறை
அதில், வாழ்க்கைத் துணைவரின் பெயரை பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் சேர்க்க அல்லது நீக்க விண்ணப்பதாரர்கள் திருமணச் சான்றிதழுக்கு மாற்றாக இணைப்பு ஜே' (Annexure J) எனப்படும் எளிமையான பிரமாணப் பத்திரத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை, விண்ணப்ப செயல்முறையை நெறிப்படுத்துவதையும் தாமதங்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் திருமண நிலையை முறையாக அறிவித்து, பாஸ்போர்ட்டில் வாழ்க்கைத் துணைவரின் பெயரைச் சேர்க்க (அல்லது நீக்க) கூட்டாகக் கோருகின்றனர்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த சீர்திருத்தத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள். மேலும் தகவலுக்கு https://www.passportindia.gov.in/psp என்ற அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் சேவா இணையதளத்தைப் பார்வையிடலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது